அகில இந்திய மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவு மாணவர்கள் புறக்கணிப்பு, கரோனா விவாகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி காட்சி வழியாக தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மரண விகிதம் குறைவாக உள்ளதாக அரசு கூறினாலும், டெஸ்ட் எடுப்பது, சிகிச்சை அளிப்பது, பெருகி வரும் நோய்த்தொற்று குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதேப்போன்று மருத்துவ மேற்படிப்பில் பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவத்தில் அகில இந்திய கோட்டாவில் ஒபிசி மாணவர்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஒரு இடம் கூட கிடைக்காமல் ஒதுக்கப்படுவதாகவும், இவ்வாறு ஒதுக்கப்பட்டதில் 11000 இடங்கள் கடந்த 4 ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என செய்தித்தாள்கள் வாயிலாக வந்த தகவலை அடுத்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தின் திமுக, இடது சாரிகள், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இதை எதிர்த்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்தன. அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேச திமுக அதன் தோழமைக்கட்சிகள் அடங்கிய காணொலி கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.