தமிழகம்

புதுக்கோட்டையில் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு வழங்கப்படும் விதவிதமான உணவுகள்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட் நலவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோருக்கு தினந்தோறும் விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றன.

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸூக்கு இதுவரை மருந்துகள் கண்டறியப்படாததால் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருவதோடு, இதை பின்பற்றுவதற்காக ஊரடங்கையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளன.

இந்நிலையில் கரோனா வார்டில் தங்கி இருப்போருக்கு சத்தான உணவும், கூட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதில், புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் நலவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருவோருக்கு தினந்தோறும் 3 வேளையும் விதவிதமான சைவ, அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து கோவிட் நல மைய மருத்துவ அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 3 வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது.

அதன்படி, தினசரி காலை 6.30 மணிக்கு டீ அல்லது காபியும், 10.30 மணிக்கு சிக்கன் சூப் மற்றும் பிஸ்கெட்டுகளும், மாலை 4.30 மணிக்கு காபி அல்லது டீயும் வழங்கப்படுகிறது. இதோடு, வேகவைத்த கடலை, சுண்டல், பாசிப்பயறு இவற்றில் ஏதாவது ஒன்றும் சேர்த்து வழங்கப்படுகிறது.மேலும், இரவு 8.30 மணிக்கு பால் வழங்கப்படுகிறது.

திங்கள்கிழமையன்று காலையில் சேமியா பாத், காய்கறி மசாலாவும், மதியம் சிக்கன் மசாலா, சாதம், முட்டை, உருளைகிழங்கு, முட்டை கோஸ் பொரியலும், இரவில் ஊத்தப்பமும் வழங்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் காலையில் சப்பாத்தி, சன்னா மசாலாவும், மதியம் புதினா, மல்லி சாதம், முட்டை, உருளைகிழங்கு, கேரட் பொரியலும், இரவில் இட்லியும் வழங்கப்படுகிறது.

புதன்கிழமைகளில் காலையில் வெங்காய ஊத்தப்பம், பட்டாணி மசாலாவும், மதியம் சாம்பார் சாதம், முட்டை, முட்டைகோஸ், பீன்ஸூம், இரவில் சப்பாத்தியும் வழங்கப்படுகிறது.

வியாழக்கிழமைகளில் காலையில் முந்திரி பருப்பு, நெய், ரவை கிச்சடியும், மதியம் சிக்கன் பிரியாணி, முட்டை, உருளைகிழங்கு சிப்ஸூம், இரவில் ஊத்தப்பமும் வழங்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் காலையில் ஊத்தப்பம், கலவை சைவ மசாலா, மதியம் தக்காளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம், முட்டை மசாலா, பீட்ரூட், முட்டைகோஸூம், இரவில் இட்லியும் வழங்கப்படுகிறது.

சனிக்கிழமைகளில் காலையில் சப்பாத்தி, சன்னா மசாலாவும், மதியம் ரச சாதம், சிக்கன் மசாலா, முட்டை, பீட்ரூட் மற்றும் இரவில் சப்பாத்தியும் வழங்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் காய்கறி ஊத்தப்பம், மதியம் காய்கறி பிரியாணி, முட்டை, உருளைகிழங்கும் இரவில் இட்லியும் வழங்கப்படுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழிகாட்டுதல்படி சிகிச்சை அளிக்கப்படுவதோடு இத்தகைய உணவுகளினாலும் உடல் வலுப்பெற்று விரைந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT