தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:
தமிழக அரசு கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில். மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஜூன் 30 வரை ஊரடங்கில் எவை எவைகளுக்கு தடை
1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை..
* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
* வணிக வளாகங்கள் ((Shopping Malls) இயங்க தடை.
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்க தடை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
* மெட்ரோ ரயில் / மின்சார ரயில் இயங்க தடை.
* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க தடை.
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை.
* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடை.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.