தமிழகம்

9 மாவட்டங்களில் வழக்கமான நடைமுறையில் நீதிமன்ற பணிக்கு பரிந்துரை- உயர் நீதிமன்றத்தில் காணொலியில் விசாரணை

செய்திப்பிரிவு

தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் வழக்க மான நடைமுறையில் நீதிமன்ற பணிகளை தொடருவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முடிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதி மன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

உயர் நீதிமன்றங்களைப் போல தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் வரும் ஜூன் 1 முதல் காணொலி மூலமாக விசாரணை மேற்கொள்ள வேண் டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழியர்களை ஷிப்ட் முறையில் பணிக்கு வரவழைக்கலாம். 65 வயதுக்கு மேற்பட்ட வழக்க றிஞர்கள் நீதிமன்றங்களுக்கு நேரில் வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள், நூலகங்கள், கேண்டீன்களை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.

9 மாவட்டங்கள்

தருமபுரி, ராமநாதபுரம், நீலகிரி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மற்றும் தேனி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் காணொலி மூலமாக அல்லாமல் வழக்கமான நடைமுறையில் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் நீதிமன்ற அறைகளில் 5-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. 15 முதல் 20 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கீழமை நீதிமன்றங்கள் செயல்பட உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

SCROLL FOR NEXT