சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக வின் வியூகம் குறித்து திருப்பூரில் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு தெளிவுபடுத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுகவின் சென்னை மாவட்ட அமைப்பு சீரமைக்கப்பட்டு, மத்திய சென்னை மாவட்டம் சில மாதங்களுக்கு முன்பு உரு வாக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய சென்னை மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், செவாலியே சிவாஜி சாலையில் உள்ள முருகன் திருமண மண்ட பத்தில் நேற்று நடந்தது.
அரசு இருட்டடிப்பு
இதில் பங்கேற்ற வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட விவசாயிக ளுக்கு எதிரான போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும். மதுக்கடைகளை மாநில அரசு மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகளை அரசே இருட்டடிப்பு செய்துள்ளது.
மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு, செப்டம்பர் 15-ம் தேதி திருப்பூரில் நடக்கிறது. சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடக்கும் மாநாடு இதுவாகும். தமிழக அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான மதிமுகவின் அணுகுமுறை எந்த திசையில் பயணிக்கும் என்பதை இந்த மாநாடு தெளிவுபடுத்திவிடும்.
இவ்வாறு வைகோ கூறினார்.