தமிழகம்

வாட்ஸ் அப் தகவல்கள் குழப்பம் தருவதாக பயமுறுத்துவதாக உள்ளது: கமல்

செய்திப்பிரிவு

வாட்ஸ் அப் தகவல்கள் பெரும்பாலான நேரங்களில் குழப்பம் தருவதாக பயமுறுத்துவதாக உள்ளது என்று கமல் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவ்வப்போது தமிழக அரசை மிக கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, நாளை (மே 31) காலை 11 மணியளவில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, ரமணன் லட்சுமி நாராயண் மற்றும் மனநல மருத்துவர் ஷாலினி ஆகியோருடன் நேரலையில் கலந்துரையாடவுள்ளார் கமல். இந்த நேரலைக்கு 'கரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரலை தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:

"இதை நான் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவர்கள் அதற்கான தகுதி பெற்றவர்கள். நம்மைச் சுற்றி நிறைய புரளிகள்தான் பரவிக் கிடக்கின்றன. வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவைப் பெறுங்கள் என்று அதைத்தான் சொல்கிறார்கள். வாட்ஸ் அப்பில் பலதரப்பட்டத் தகவல் பரப்பும் அதன் பயனர்களைத்தான் சொல்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அது குழப்பம் தருவதாக, பயமுறுத்துவதாக உள்ளது. (இந்த உரையாடல் மூலம்) கோவிட்-19க்குப் பிறகு புதிய சகஜ நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி நிபுணர்களிடம் பேசித் தெரிந்துகொள்ள முயல்கிறோம்.

அவர்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றில் பல்வேறு கட்டங்கள் இருக்கும். மொத்தத்தையும் இயற்கையின் கைகளுக்கே விட்டுவிடாமல் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற வேண்டும்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சரிடம் கலந்துரையாட இருப்பது குறித்து கமல், "என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசும் ஒரு சில அமைச்சர்களில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் ஒருவர். ஒரு அறிவியல் ஆசிரியராக இருந்துகொண்டு, பிரச்சினைகளை விஞ்ஞானப்பூர்வமாகவும், தர்க்க ரீதியிலும் அணுகியுள்ளார். இந்த நோய்த்தொற்று சமயத்தில் கேரள அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார் கமல்.

SCROLL FOR NEXT