சு.பழனிசாமி 
தமிழகம்

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்களால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தடுத்து நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:

"ஊரடங்கைப் பயன்படுத்தி, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள், கிணத்துக்கடவு, மதுக்கரை, செட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எம்.சாண்ட், மணல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள், விதிகளை மீறி ஏராளமான லாரிகள் மூலம் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படுகின்றன.

சில இடங்களில் உரிமம் கலாவதியான கல்குவாரிகள், செங்கல் சூளைகள் ஆகியவை மீண்டும் செயல்படுகின்றன. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு கனிம வளங்கள் சுரண்டப்பட்டு, கொண்டு செல்லப்படுகின்றன. அதிக அளவில் லாரிகளை இயக்குவதால் கிராமப்புற சாலைகள் முற்றிலும் சேதமடைகின்றன. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காற்று மாசும் ஏற்படுகிறது. எனவே, இவற்றைத் தடுக்க வருவாய், கனிமவளம், பொதுப்பணி, காவல் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள், செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்படாத கல்குவாரிகளை நீர்நிலைகளாக மாற்ற வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT