பரிசோதனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டபோது. 
தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக வாய் புற்றுநோய் இலவசப் பரிசோதனைக்கான வாகனம் தொடக்கம்

ஆர்.கிருஷ்ணகுமார்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக வாய் புற்றுநோய் இலவசப் பரிசோதனைக்கான வாகனச் செயல்பாடை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் கோவையில் இன்று தொடங்கியது.

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறது. நடப்பாண்டு புகையிலைப் பொருட்கள் தொழில் நிறுவனங்களின் கட்டுக்கதைகள், சந்தைப்படுத்துதல் யுக்திக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதையொட்டி, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில், புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா தொற்றின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு யூடியூப் வீடியோ வெளியீடு மற்றும் தமிழகத்திலேயே முதல் முறையாக இலவச வாய் புற்றுநோய் பரிசோதனைக்கான வாகனச் செயல்பாடு தொடக்க நிகழ்ச்சி இன்று (மே 30) நடைபெற்றது.

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு யூடியூப் வீடியோவையும், விழிப்புணர்வு வாகனச் செயல்பாட்டையும் எஸ்.என்.ஆர். சன்ஸ் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தொடங்கிவைத்தார். டீன் சுகுமாறன் தலைமை வகித்தார் . ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மைய இயக்குநர் பி.குகன், முதன்மை அறுவைசிகிச்சை நிபுணர் கே.கார்த்திகேஷ், அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், முதன்மை செயல் அலுவலர் சுவாதி ரோஹித், தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பி.குகன் கூறும்போது, "வாய் புற்றுநோய் பரிசோதனை வாகனம் மூலம் மருத்துவ ஆலோசகர் மற்றும் பணியாளர்கள் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வர். மேலும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அப்பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் விளக்குவார்கள்.

புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நுரையீரலை அதிகம் பாதிக்கும். இதனால், ஐசியூவில் சேர்ப்பது, வென்டிலேட்டர் தேவை அதிகமாக இருக்கும். இது தொடர்பாக `CANCER AWARENESS SRIOR’ என்ற யூடியூப் சேனலில் பிரத்யேக வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 2012-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 623 பரிசோதனைகள் மேற்கொண்டதில், 54 ஆயிரத்து 615 பேருக்கு புகையிலைப் பழக்கம் இருப்பதும், 182 பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 28 ஆயிரத்து 75 பேருக்கு புற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

SCROLL FOR NEXT