நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 70-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரையில் ஜூன் 1 முதல் 7-ம் தேதி வரையில் சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறுகிறது. அப்போது என்சிபிஎச் வெளியீடுகளுக்கு 25 முதல் 50 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
"1951-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பிறந்தது. அன்று முதல் இன்று வரையிலான இந்த 69 ஆண்டு காலத்தில் படிப்படியாக வளர்ந்து முன்னேறி ஒரு பேரமைப்பாக இன்று நிலைபெற்றுள்ளது. தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூலநூல்களைப் பதிப்பித்து வருகிறோம். மேலும், இலக்கியம், சிறுவர் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, அறிவியல், வரலாறு, சுயமுன்னேற்றம், மார்க்ஸியம், பொதுவுடமை, மெய்யியல், தொழில்நுட்ப இயல், சமூகவியல் தொடர்பான தலைசிறந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எங்கள் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.
தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பொருட்டு, ஈழத்துப் பேராசிரியர்கள் கலாநிதி கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்களின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, ஆப்டின் ஆகியோரின் சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளோம். மார்க்சிய அறிஞர்களான தா.பாண்டியன், எஸ்.வி.ராஜதுரை, ந.முத்துமோகன் ஆகியோரின் நூல்களும் திறனாய்வாளர்களான தி.சு.நடராஜன், ராஜ்கௌதமன், பா.ஆனந்தகுமார் போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.
தமிழக வரலாற்று ஆய்வாளர், நாட்டாரியலார் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர்கள் பொன்னீலன், டி.செல்வராஜ் போன்ற முன்னணி எழுத்தாளர்களின் நூல்களையும், இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், முன்னணி எழுத்தாளர்கள் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோரின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறோம்.
தமிழகத்தின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் பங்குபெறுவதையும், தனியே புத்தகக் காட்சி நடத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ள என்சிபிஎச் நிறுவனம், 70-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி சிறப்பு புத்தகக் காட்சியை நடத்தவுள்ளது.
இதன்படி மதுரை மேலக்கோபுரத்தெருவில் 78, 80 என்ற இலக்கத்தில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் காட்சி அறையில் வருகிற ஜூன் 1-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 7-ம் தேதி வரையில் சிறப்புப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. அப்போது என்சிபிஎச் நிறுவன வெளியீடுகளுக்கு 25 முதல் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். மற்ற நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்”.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.