தமிழகம்

மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் வேதா இல்லம் அரசு இல்லமாக அறிவிக்கப்பட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

ரெ.ஜாய்சன்

மக்களின் கோரிக்கை, விருப்பத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், அரசு இல்லமாக அறிவிக்கப்பட்டது என, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி கிராமத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆன்லைனில் (ஓடிடி தளம்) திரைப்படங்களை திரையிடுவது என்பது நமது அதிகாரத்துக்கு உட்பட்ட விசயம் அல்ல. இது உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு கூட தலையிட முடியாத சூழல் உள்ளது.

சினிமா துறைக்கு இது ஆரோக்கியமானது அல்ல. இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆன்லைனில் ஓடிடி தளம் மூலமாக சினிமாவை வெளியிடுவது மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள்.

100 ஆண்டு கால சினிமா வரலாற்றில் திரைப்படங்கள் திரையரங்குகள் மூலமாக மக்களை சென்றடைந்தன. இதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கல் என அனைத்து தரப்பினரும் பயனடைந்தனர். ஆன்லைனில் திரையிடுவதால் அனைவரும் பாதிப்படைவார்கள்.

இதை சட்டம் போட்டு தடுக்கும் நிலை கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். அதற்கு அரசு உதவி செய்யும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், மக்களின் கோரிக்கை, விருப்பத்தின் அடிப்படையில் தான் கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டம் இயற்றி அரசு இல்லமாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் பல தலைவர்கள் வாழ்ந்த இல்லங்கள் அரசு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு பேசுவது சரியாக இருக்காது.

திமுக வேண்டாத வேலைகளை செய்து வருகிறது. கரோனா நேரத்தில் மனுக்களை பெறுவது நடைமுறையில் சரியானது அல்ல. இதை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். இது விளம்பரத்துக்காக மட்டுமே பயன்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பயன்படாது என்றார் அமைச்சர்.

SCROLL FOR NEXT