எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் மனு அளிக்கும் ஹெரிப், பொன்முடி. 
தமிழகம்

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை சீர்குலைக்க ஆள்மாறாட்டம்: அமைச்சர் காமராஜுக்கு பொன்முடி சவால்

எஸ்.நீலவண்ணன்

உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.

திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் வண்டிமேட்டைச் சேர்ந்த இதயதுல்லா என்பவருக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் வரும் கோரிக்கைகள் போலியானவை என்றும், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணித் துணைத்தலைவர் ராமதாஸின் சகோதரர் சபரிநாதன் என்பவர்தான் இதயதுல்லா என்றும், திமுகவிடம் எவ்வித நிவாரணமும் கேட்கவில்லை என்றும் அவர் பேசும் வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

எனவே, திமுகவின் திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆள்மாறாட்டம் செய்து பொய்யான செய்தியை வெளியிட்டதாக, அமைச்சர் காமராஜ் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சபரிநாதன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று (மே 30) முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் ஹெரிப், எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், பொன்முடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமைச்சர் காமராஜ் அரசியல் செய்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் விழுப்புரத்தைச் சேர்ந்த இதயதுல்லா என்பவர் திமுகவில் உதவி கேட்கவில்லை என்று கூறியுள்ளார். வண்டிமேட்டைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் சகோதரர் சபரிநாதன் தன்னை இதயதுல்லா என பொய் சொல்லியுள்ளார். இவர் சபரிநாதன்தான் இதயதுல்லா இல்லை என்று நான் நிரூபிக்கிறேன். அவர் இதயதுல்லாதான் என நிரூபிக்கட்டும். அப்படி நிரூபித்தால் நான் அரசியலைவிட்டே செல்கிறேன். அவர் நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டுச் செல்வாரா...? அவர் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT