‘‘அமைச்சர்கள் மாண்பு என்ற பட்டத்தை மட்டும் போட்டுக் கொண்டால் போதாது மாண்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்,’’ என முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பல மனுக்கள் தீர்க்கப்பட்டன.
தீர்க்க முடியாத 1,800 மனுக்கள் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டன. இன்று மேலும் 13,277 மனுக்களை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் அளித்தார்.
அப்போது பெரியகருப்பன் கூறும்போது, ‘‘திமுக அளித்த மனுக்கள் குறித்து அலுவலர்கள் விசாரிக்கும்போது தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றனர்,’’ என தெரிவித்தார். ‘விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக,’ ஆட்சியர் தெரிவித்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா விஷயத்தில் அரசு உண்மை நிலவரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான செய்திகளைக் கூறுவது தவறு. இது நல்ல நிர்வாகத்திற்கு அடையாளமாக இருக்காது.
மக்கள் மீது உண்மையான அக்கறையோடு தான் திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் தலைவர் முதல் அடிமட்டத் தொண்டன் வரை ஈடுபட்டுள்ளதை தமிழக மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நல்ல செய்திகளை மறைப்பதற்காக அமைச்சர்கள் உண்மைக்குப் புறம்பாக கூறுகின்றனர். இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். மாண்பு என்ற பட்டத்தை மட்டும் போட்டுக் கொண்டால் போதாது மாண்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும், என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகரச் செயலாளர் துரைஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.