கால்நடை இனப்பெருக்கச் சட்டத்தில் இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்வதற்கு எதிரான சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசு கடந்தாண்டு கால்நடை இனப்பெருக்க சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில் 12வது பிரிவு மாடுகளை வளர்ப்போர்களுக்கு எதிராக உள்ளது. இப்பிரிவில் காளைகள் அனைத்தையும் பதிவு செய்து தகுதி சான்று பெற வேண்டும். தகுதியற்ற காளைகளை அழித்துவிட வேண்டும்.
நாட்டு பசுக்களை இயற்கை முறையில் நாட்டு காளைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்த முடியாது. செயற்கை கருவையே பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இயற்கை முறையிலான இனப்பெருக்கத்திற்கு எதிராக இப்பிரிவு அமைந்துள்ளது. எனவே கால்நடை இனப் பெருக்க சட்டத்தின் 12 வது பிரிவை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணயை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு ஒத்திவைத்தது.