கரோனா அறிகுறி இல்லாத நிலையிலும் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தனிமைப்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் விமான நிலையத்தில் பயணிகள் தினசரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
உள் நாட்டு விமான சேவை துவங்கியதைத் தொடர்ந்து மதுரைக்கு வாரத்தில் 3 நாட்கள் புதுடெல்லியிலிருந்தும், தினசரி சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.
மதுரை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட கரோனா பாதிப்பிற்கான அறிகுறி ஏதும் உள்ளதா என சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். பிற மாவட்டத்தினரில் அறிகுறி இருப்பவர்களைத்தவிர மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லாத நிலையிலும், தனியார் விடுதியில் ஒருநாள் தனிமைப்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் தினசரி பயணிகள் பலரும் போலீஸார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘ வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டுமே ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி சேகரித்தபின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த உத்தரவிற்கு மாறாக மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
மதுரை மாவட்ட பயணிகளை மட்டும் வெளியே விடாமல் தனியார் விடுதியில் ஒரு நாள் கட்டாயமாக தங்க வைக்கப்படுகின்றனர். சென்னையில் கூட இல்லாத நடைமுறையை இங்கு பின்பற்றுவதன் மூலம் அரசாணையை அதிகாரிகள் மீறுகின்றனர். ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், ‘ பயணிகள் சோதனைக்காக 4 மணி நேரம்வரை காத்திருக்கின்றனர். உள்ளூர் பயணிகளை முகாமிற்கு அழைத்துச்செல்வததால் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கடும் வாக்குவாதம் தினசரி நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் விமான நிலைய கண்ணாடியை பயணி ஒருவர் உடைக்க முயன்றார். பெண்கள், கர்ப்பிணிகள் என பலரும் வாக்குவாதம் செய்வதால் சமாளிப்பது கடினமாக உள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவால் அலுவலர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.