திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவை காரணம் காட்டி முதியவரை உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி டவுன் தென்பத்து கோல்டன்நகரைச் சேர்ந்தவர் எம். கந்தசாமி (65). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த மாதம் 2-ம் தேதி வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி காரணமாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள், கரோனாவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்து நோயாளியை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் வேறுவழியின்றி அவரது மனைவி காந்திமதி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் 7-ம் தேதி மீண்டும் அவரது உடல்நிலை மோசமானதால், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரோனாவை காரணம் காட்டி 2.4.2020-ம் தேதி தன் கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் மறுத்ததே தனது கணவரின் மரணத்துக்கு காரணம் என்று காந்திமதி குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டு மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அப்புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தில் 4 வாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து சுகாதாரத்துறை செயலாளர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.