சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பு வார்டில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த செவிலியர் பிரிசில்லாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:
"சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் கடந்த 27-ம் தேதி அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஜோன் மேரி பிரிசில்லாவின் சேவையினை அங்கீகரிக்கும் விதமாக, சிறப்பினமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்"
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.