சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று (மே 30) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 5-வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர் குழுவினர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி 5-வது முறையாக ஆலோசனை நடத்தினார். கரோனா ஒரு புது வைரஸ் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வைரஸின் பண்புகளை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. எல்லா ஊர்களிலும் பல ஆய்வுகளைச் செய்கிறோம். இந்தியாவிலும் பல ஆய்வுகளை மேற்கொள்கிறோம். அதன் புதிய முடிவுகள் குறித்து இன்று ஆலோசித்தோம்.
அதை வைத்து அடுத்த மாதம் எப்படி இருக்கும் என இப்போதைக்குக் கணிக்க முடியாது. இந்த வைரஸின் தாக்கம் நகரங்களில் அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிகப்படியான தொற்றுகள் 30 மாவட்டங்களிலிருந்துதான் வருகின்றன. இதன் அடிப்படையில் உத்திகளை வகுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சென்னை பெருநகரமாக இருப்பதால், அதிக தொற்றுகள் வருகின்றன. அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது. தொற்று அதிகமானோருக்கு ஏற்பட்டாலும், இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. அதுவொரு நல்ல விஷயம்.
தமிழக அரசு படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. அதனால், நம்மால் சமாளிக்க முடிகிறது. மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் சிந்திக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு இப்போது வருகின்றனர். அதை நாம் அனுமதித்துதான் ஆக வேண்டும்.
நமக்குப் பல சவால்கள் இருக்கின்றன. முதலாவது, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எண்ணிக்கை அதிகமாகும்போது பயப்பட வேண்டாம். யாருக்குத் தொற்று இருக்கிறது எனக் கண்டறிந்தால்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும். தேவையான சிகிச்சைகளை எடுத்து மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
இரண்டாவது, முகக்கவசம் அணிவது. எல்லோரும் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிழக்கு ஆசிய நாடுகளில் 99% மக்கள் முகக்கவசம் அணிந்ததால்தான் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். அப்படி இல்லாத நாடுகளில் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கஷ்டம் ஏற்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று அங்கு அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும். எல்லா தளர்வுகளையும் அங்கு கொடுக்க முடியாது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை ஒரே மாதிரி அமல்படுத்தாமல் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு நடத்தி அதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்"
இவ்வாறு பிரதீப் கவுர் தெரிவித்தார்.
இதையடுத்து, குழுவில் உள்ள மற்ற மருத்துவர்கள் கூறுகையில், "தொற்றின் தாக்கம் அதிகரிப்பது எதிர்பார்த்ததுதான். இது புதிய விஷயமல்ல. சென்னையில் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஊரடங்கு உதவியுள்ளது. இறப்பு விகிதத்தைக் குறைத்தது தமிழகத்தில் நல்ல விஷயம். பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் தொற்றிலிருந்து நாம் மீள முடியும்.
காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் வெளியில் வேலைகளுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். உடல்நிலை சரியில்லாதபோது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மோசமானதற்குப் பிறகு செல்வது தவறு. குறிப்பாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீக்கிரமாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
கார்களில் பயணிக்கும்போது பலரின் முகக்கவசங்கள் கழுத்துக்கு அடியில்தான் இருக்கிறது. பல சமயங்களில் முகக்கவசங்களைக் கழற்றிவிடுகின்றனர். இது நல்லதல்ல. ஒருவரின் அருகில் இருக்கும்போதுதான் முகக்கவசம் அவசியம். தொலைவில் இருக்கும்போது அவசியமல்ல.
இருமல், தும்மலின்போது கைகளை மூடிக்கொண்டு செய்ய வேண்டும். இதனைப் பழக்கவழக்கங்களில் கொண்டு வர வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இவர்களைக் கூடுதலாகப் பாதுகாக்க வேண்டும்.
சென்னையில் மண்டலம் 4, 5, 6 ஆகியவற்றில் நிறைய குடிசைப் பகுதிகள் இருப்பதால் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கடந்த 3-4 நாட்களாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. நீரிழிவு, ரத்த அழுத்தம், டயாலிசிஸ் செய்பவர்கள், 60 வயதுக்கு மேலானவர்கள் அதிகம் இறக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பது முக்கியம்.
இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து மிக விரைவில் விடுதலையாகப் போகிறோம். நிறைய தொற்றாளர்களைக் கண்டுபிடிக்கும்போது இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். இதுகுறித்த தவறான கருத்துகளை ஊடகங்கள் ஒழிக்க வேண்டும்.
பொதுப்போக்குவரது, திருமண மண்டபங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட தளர்வுகளைத்தான் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது. சென்னையில் இந்தத் தளர்வுகளைக் கொடுத்தால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்பதால், அதனைப் பல கட்டங்களாக செயல்படுத்தச் சொல்லியிருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
அப்போது சென்னையில் சமூகப் பரவல் ஆரம்பித்துவிட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சமூகப் பரவல் ஆகியிருந்தால் நிறைய பேர் இத்தொற்றால் இறந்திருக்கக் கூடும். சில இடங்களில் பரவுகிறது" என மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.