வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து கோவில்பட்டி பகுதிக்கு பெண் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், வேம்பார் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு, சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த சென்னையில் இருந்து வந்த, எட்டயபுரம் அருகே கடலையூர் வள்ளிநாயகிபுரத்தை சேர்ந்த 23 வயது ஆணுக்கும், திருவள்ளுரில் இருந்து வந்த 29 வயது பெண்ணுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதே போல், கோவில்பட்டி கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த மும்பையில் இருந்து வந்த கயத்தாறு அருகே ஆத்திகுளத்தைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கும், உ.பி. மாநிலத்தில் இருந்து வந்த புதூரை சேர்ந்த 33 வயது ஆணுக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.