வட மாநிலங்களில் விவசாயப் பயிர்களை வெட்டுக்கிளிகள் துவம்சம் செய்து வருகின்றன. தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இருக்காது என வேளாண் துறையினர் சொல்லிவரும் நிலையில் குமரி மாவட்டத்தில் வாழைத் தோட்டங்களில் அரியவகை வெட்டுக்கிளிகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில் உள்ள வெட்டுக்குழி பகுதியில் ஏராளமான விவசாயிகள் ரப்பர், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல் தோட்டப் பராமரிப்பிற்காக இன்று தங்கள் தோட்டங்களுக்குச் சென்ற அந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களது வாழை, ரப்பர் மரங்களின் இலைகளில் அரிய வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாக அமர்ந்துகொண்டு மரங்களின் இலைப் பகுதியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. உடனே இதுகுறித்து தோட்டக்கலை, வேளாண் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வர உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “வழக்கமாக எங்கள் பகுதியில் பச்சை வண்ண வெட்டுக்கிளிகள்தான் அதிகமாக வரும். ஆனால், இப்போது எங்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள், கருப்பு நிறத்தில், புள்ளி புள்ளியாக இருக்கின்றன. இந்த ரக வெட்டுக்கிளியை எங்கள் பகுதியில் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. வாழையைப் பொறுத்தவரை பழமாக விற்பது ஒருபக்கம் இருந்தாலும், இலையாக விற்பதிலும் வருமானம் பார்த்துவந்தோம். ஆனால், வெட்டுக் கிளிகள் வருகையால் இப்போது இலையை விற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
''குமரி மாவட்டத்தில் தென்படுவது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகள் இல்லை. இவை சாதாரண வெட்டுக்கிளிகள்தான்'' என மாவட்ட நிர்வாகமும், பூச்சியியல் துறையினரும் தெரிவித்துள்ளனர். என்றாலும் முறையான ஆய்வுக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.