தமிழகம்

கரோனாவைத் துரத்தப் புகைப்பழக்கத்தை மறப்பீர்: கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநரின் புகையிலை ஒழிப்பு தினச் செய்தி

கா.சு.வேலாயுதன்

‘புகைப்பழக்கத்தால் பாதிக்கப்படும் நுரையீரலைக் கரோனா வைரஸ் எளிதாகத் தாக்கும். எனவே, மே 31-ல் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் புகையிலை ஒழிப்பு தினத்தில், கரோனாவின் அபாயத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலகப் புகையிலை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகையிலைப் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது. இந்த மரணங்களில் 70 லட்சத்துக்கும் அதிகமானவை நேரடிப் புகையிலைப் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுபவை.

இந்தியாவில் புகையிலைப் பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். அந்த இறப்புகளில் பெரும்பாலானவை இதய நோய்களால் ஏற்படுகின்றன. பீடி, சிகரெட், புகையிலையால் மக்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களால் தொண்டை மற்றும் வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல் பல சுவாச நோய்த் தொற்றுகளுக்குக் காரணியாகவும், சுவாச நோய்களின் தீவிரத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. ஏப்ரல் 29 அன்று பொது சுகாதார நிபுணர்களின் ஆய்வுகளை மதிப்பாய்வு செய்ததில், புகை பிடிப்பவர்களுக்குக் ‘கோவிட்-19’ தொற்று உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

‘கோவிட் -19’ முதன்மையாக நுரையீரலைத் தாக்குகிறது. புகைப்பிடித்தல் நுரையீரல் செயல்பாட்டைப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட நுரையீரலைக் கரோனா வைரஸ் எளிதாகத் தாக்குகிறது. இதய நோய், புற்றுநோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கும் புகையிலை ஒரு முக்கியக் காரணியாகும். இவ்வாறான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையே ‘கோவிட்-19’ தொற்று அதிகமாகப் பாதித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய பாதிப்புகளைக் கொண்டவர்கள்தான்.

பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றை மெல்லுதல் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து உமிழ வேண்டிய அவசியம் எழுகிறது. பொது இடங்களில் உமிழ்வது ‘கோவிட் -19’ வைரஸின் பரவலையும் அதிகரிக்கும்.

இந்நிலையில், ‘கோவிட்-19’ தொற்றை முன்வைத்துப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிறுத்த வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட 1800 110 456 எனும் இலவச உதவி எண்ணை அழைக்கலாம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT