உறுதியோடு செயல்படுகிற பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து சிறக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவில் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மோடி பிரதமராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். 'அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக உயர்ந்து, அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்' என்ற குறிக்கோளுடன் பாஜக ஆட்சி செய்ய தொடங்கியது.
குறிப்பாக, பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் தான் பாஜக ஆட்சியின் தனித்தன்மை. அது மட்டுமல்ல, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது மத்திய பாஜக அரசு.
ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்திய கடந்த ஓராண்டு காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஸ்திரப்படுத்தி மேலும் மேம்படுத்துதல், வேளாண்மை, நீர்வளம், தொழிலாளர், ஏழை எளியோர் நலனில் சிறப்புக் கவனம் செலுத்துதல், தேசப்பாதுகாப்பை வலுப்படுத்துதல், அண்டை மற்றும் அயல் நாடுகளோடு உறவை வலுப்படுத்துதல், தேசத்தில் தீர்க்கப்படாமல் இருந்த பல நீண்ட காலப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் ஆகிய லட்சியங்களை உள்ளடக்கி, உரிய திட்டங்களை அறிவித்து செயல்படத் தொடங்கியது. அதன் பயனும் மக்களைச் சென்றடைய ஆரம்பித்தது. வளர்ச்சியின் அறிகுறியும் அனைவருக்கும் தெரிந்தது.
இச்சூழலில் எதிர்பாராத விதமாக கரோனா என்ற தொற்று நோய் உலகின் அனைத்து நாடுகளையும் தாக்கியது. வளர்ந்த நாடுகள் கூட இதிலிருந்து தப்பவில்லை. மிகப்பெரிய சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தேசமும் அதன் தாக்குதலுக்கு உட்பட்டது.
ஆனால், மத்திய அரசு முன்னதாகவே விழித்துக்கொண்டு, மாநில அரசுகளின் துணையையும் ஏற்றுக்கொண்டு, கரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நோய் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்து வழங்குவது, ஒட்டுமொத்த இந்திய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிடுவது என்று அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் நடுநிலையாளர்களும், உலகின் பிற நாட்டுத்தலைவர்களும் இந்திய அரசையும், மக்களையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.
கொடிய கரோனாவின் தாக்குதலால் இந்தியப் பொருளாதாரம் சரியாமல் தடுக்கவும், அது மீண்டும் வளர்ச்சி நடைபோடவும் பிரதமரின் வழிகாட்டுதலில் ரூபாய் 20 லட்சம் கோடி அளவிலான பொருளாதார மீட்சித்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பயனாக தேசம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் என்ற நம்பிக்கையை அனைத்துப் பிரிவினரிடமும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், 2019-ல் மத்தியில் பாஜக தலைமையில் நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக பதவியேற்று 30-ம் தேதியான இன்றுடன் ஒராண்டு கால ஆட்சி சிறப்பாக நிறைவு பெறுகிறது.
எனவே, மத்திய பாஜக அரசின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் நலன், நாட்டு நலன் சார்ந்து தொலைநோக்குப் பார்வையோடு, துணிச்சலோடு, உறுதியோடு செயல்படுகிற பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து சிறக்கவும், வளமான பாரதம் படைக்கவும் தமாகா சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.