மதுரை மாவட்டத்தில் கத்திரி வெயிலால் பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள் கத்திரி வெயிலில் இருந்து ஓரளவு தப்பினர். எனினும் இரவில் புழுக் கத்தால் தூங்க முடியாமல் தவித் தனர்.
இந்நிலையில், கத்திரி வெயி லின் இறுதி நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணி முதல் கன மழை பெய்யத் தொடங் கியது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் இரவு வரை இந்த மழை நீடித்தது.
வாகனங்களில் செல்ல முடி யாத அளவுக்கு சாலைகள், தெருக் களில் மழைநீர் சிற்றாறுகள் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலமான சூறைக் காற்றும் அடித்ததால் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. மாநகர், புறநகர் பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் இந்த மழைக்கு ஒடிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தன. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரங்கள் மின் வயர்களிலும், மின் கம்பங்கள் மீதும் விழுந்தன. இதனால், நேற்று முன்தினம் பிற் பகல் முதல் மின்தடை ஏற் பட்டது.
மின்தடையால் குடியிருப்புகள் இருளில் மூழ்கின. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணி களில் ஈடுபட்டனர். ஆனால், பெரிய மரங்கள் விழுந்ததால் அவற்றை உடனடியாக அகற்ற முடியவில்லை. அதனால், நேற்று முன் தினம் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை.
நகர் பகுதியில் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சில பகுதிகளில் மின்சாரம் வந்தது. ஆனால், புறந கரில் நேற்று காலை 11 மணிக்கே மின்சாரம் வந்தது. தொடர்ந்து 15 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.மதுரையில் நீண்ட நாட்களுக்குப் பின் அதுவும் கோடை காலத்தில் மழை பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் வெயிலால் தவித்து வந்த நிலையில் கத்திரி வெயிலின் இறுதி நாளில் பெய்த இந்த மழை வெப்பத்தைத் தணித்து மக்களின் மனங்களைக் குளிர்வித்தது.
கள்ளிக்குடியில் அதிகபட்சமாக 116.4 மிமீ
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
மாவட்டத்திலேயே கள்ளிக்குடி பகுதியில் அதிகபட்சமாக 116.4 மிமீ மழை பெய்திருந்தது. அப்பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய், ஊருணிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இம் மழையால் பல இடங்களில் நீர் தேங்கி குளிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வழி ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி வரையில் பல்வேறு பகுதிகளில் பதி வான மழை அளவு விவரம் (மிமீ):
கள்ளிக்குடி-116.4, இடையபட்டி-105, மதுரை நகர்- 84.3, திருமங்கலம்-83.6, பேரையூர்-81, விமானநிலையம்-63, சோழவந்தான்-31, உசிலம்பட்டி-25.4, ஆண்டிபட்டி-22.6, சிட்டம்பட்டி-22.8, தனியாமங்கலம்-21, வாடிப்பட்டி-20, மேட்டுப்பட்டி-16, கள்ளந்திரி-12.8, மேலூர்-7, புலிப்பட்டி-6.4.