சிறிய பஸ்களில் உள்ள இலை சின்னங்களை மறைக்க இன்றுமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழக சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகள் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையைப் போல உள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
அதேபோல் அம்மா குடிநீர் பாட்டில்கள் மற்றும் அரசு சொத்துகளில் இடம் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா படங்களையும், இரட்டை இலையைப் போன்ற இலை அமைப்புகளையும் அகற்ற வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்று அவர் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது கோரிக்கை மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மார்ச் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகளை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானதே என்று தீர்ப்பு கூறியது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி , எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழக அரசின் சிறிய பஸ்களில் உள்ள இலை ஓவியங்களை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இலை சின்னங்களை மறைக்க இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.