கோவை சலீவன் வீதியில் ராகவேந்திரா சுவாமி கோயில், வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த நபர், 2 பிளாஸ்டிக் கவர்களை எடுத்து இரு கோயில்களின் முன்பும் வீசிச் சென்றுள்ளார்.
அருகேயிருந்த பூ வியாபாரி, அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் பன்றி இறைச்சி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடைவீதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையில், போலீஸார் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.