ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை - தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட் பகுதியில் பூண்டி ஏரியை நோக்கிச் செல்கிறது. 
தமிழகம்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்- விநாடிக்கு 316 கன அடி வருகை

செய்திப்பிரிவு

கண்டலேறு அணையிலிருந்து, சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திரா அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும். தற்போது சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய முக்கிய ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துவதாலும், கோடை காலம் என்பதாலும் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதைச்சமாளிக்க கிருஷ்ணா நீரை திறக்கவேண்டும் என ஏற்கெனவே ஆந்திர அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜீரோ பாயின்டை அடைந்தது

அதன் விளைவாக, கடந்த 25-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடிதிறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை முதல் விநாடிக்கு 1,200 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் 152 கி.மீ.தொலைவில் உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. அப்போது, விநாடிக்கு20 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர், நேற்று மதிய நிலவரப்படி விநாடிக்கு 316 கன அடியாக உள்ளது.

ஜீரோ பாயின்டை அடைந்துள்ள கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று காலை 10.45 மணிக்கு வந்தடைந்தது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT