தமிழகம்

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரி திமுக வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

மருத்துவ மேற்படிப்பு மற்றும் இளநிலை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலங்கள் ஒப்படைக்கும் இடங்களில் தமிழகத்தில் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக எம்பி டிகேஎஸ்.இளங்கோவன் சார்பில் திமுக மூத்த வழக்கறிஞரும், எம்பி.யுமான பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாடுமுழுவதும் மருத்துவ மேற்படிப்பு, மருத்துவ இளநிலை, டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால் ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழகத்தில் ஓபிசி (பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட) வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பிற மாநிலங்களிலும் அந்தந்தமாநிலங்களுக்கான இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இதை இந்தகல்வி ஆண்டிலேயே அமல்படுத்த அறிவுறுத்த வேண்டும். எனவே கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான மருத்துவ முதுகலை நீட் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டும். தமிழகத்தில் ஓபிசி வகுப்பினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், தமிழகத்தில் நீட் கலந்தாய்வை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மனு

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘‘மாநிலங்களால் மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் 27 சதவீதத்தை பிரத்யேகமாக ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஓபிசி, பிசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கு சேர்த்து 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தாமல், நீட் கலந்தாய்வை நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT