தமிழகம்

தமிழகத்தில் திருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

எஸ்.கோமதி விநாயகம்

திருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒருமுகமாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20-ன் கீழ் 6 பிரிவுகளாக ரூ 10 கோடி மதிப்பில் 14.34 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் நடைபெறும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு வந்து செல்லும் லாரிகள் நிறுத்தப்படும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரிக்கு சென்று, லாரிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.

அங்கு தீப்பெட்டி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு வழங்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் வெட்டுக்கிளி பரவல் இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூ.54 லட்சம் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவிலேயே திருட்டு விசிடியை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழகம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்த சட்டத்தை கொண்டு வந்தார். சட்டம் நடைமுறையில் தான் இருக்கிறது.

அதனை செயல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது. ஆனால் அதற்கு அந்தத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒருமுகமாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் திருட்டு விசிடியை முழுமையாக ஒழிக்க முடியும். இதுதொடர்பாக அவர்களை அழைத்து பலமுறை பேசியுள்ளேன். தற்போது திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ஓடிபி பிளாட்பார்மில் படங்கள் வெளியாவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை நேரடியாக தடுக்க முடியாது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், முக்கிய நட்சத்திரங்கள் கலந்து பேசி முடிவு எடுத்தால் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும், என்றார் அவர்.

SCROLL FOR NEXT