தமிழகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் லூாயி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் இடங்களில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் கரோனா நோயாளிகளுக்கும் தொற்று ஏற்படவாய்ப்புள்ளது. ஆனால் கரோனா பரவலைத் தடுக்க தூய்மைப் பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியன வழங்கப்படவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை.
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அதிகாரி ஒருவரை நியமித்து தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி இன்று விசாரித்தனர். இதே கோரிக்கை தொடர்பான மனுவுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.