மதுரை காளவாசலில் நீண்ட நாள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரூ.54 கோடியில் கட்டப்பட்டுள்ள காளவாசல் மேம்பாலம் கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளதால் ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவுக்காக மேம்பாலத்திற்கு வெள்ளையடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்து மதுரையில் மக்கள் நெருக்கமும், போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், காளவாசல் பகுதிகளில் தினமும் பல லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
இப்பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் பெரும் போராட்டத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வழியில் உள்ள காளவாசல் சிக்னலைக் கடந்த செல்ல வாகன ஓட்டிகள் தவமாக காத்திருக்க வேண்டி இருந்தது.
அதனால், காளவாசலில் ரூ.54 கோடியில் உயர்மட்டம் மேம்பாபாலம் கட்டும் பணி 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. பழங்காநத்தத்தில் இருந்து திண்டுக்கல் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள், மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் உயர் மட்டம் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்ததால் புறவழிச்சாலைகளில் இருந்து திண்டுக்கல் செல்லக்கூடிய வாகனங்கள், பெரியாரில் இருந்து தேனி சாலைக்கு செல்லும் வாகனங்கள் காளவாசல் சிக்கனல் பகுதியில் பல கி.மீ., தூரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட இந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு தற்போது காளவாசல் மேம்பாலம் கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளது. திறப்பு விழாவுக்காக பாலத்திற்கு வெள்ளையடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மேம்பாலம் கட்டுமானப்பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டனர். நல்வாய்ப்பாக, கரோனாவுக்கு முன்பே இந்தப் பாலம் பணி ஒரளவு முடிந்துவிட்டதால் தற்போது இறுதிக்கட்டப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜூன் 2வது வாரத்தில் இந்த பாலம் திறந்து வைக்கப்படுகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் பழங்காநத்தத்தில் இருந்து வரும் வாகனங்கள் இனி, காளவாசல் சிக்கனலில் நின்று செல்லாமல் இந்த பாலம் வழியாக திண்டுக்கல் சாலைக்கு சென்றுவிடலாம்.
அதுபோல், திண்டுக்கல் பகுதியில் இருந்து பழங்காத்தம் பகுதிக்கு செல்லும் வாகனங்கள், பாலம் வழியாக சென்றவிடுவார்கள். அதனால், காளவாசல் பகுதியில் 50 சதவீதம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
இந்த பாலம் 17 மீட்டர் அகலம், 750 நீளம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை போல் விசாலமாக கட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை, ’’ என்றார்.