தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் படிப்படியாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதனால் உள்ளூரில் வேலையின்றித் தவித்த பலருக்கும் புதிதாக வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழல் உருவாகி வருகிறது.
பொதுமுடக்கம் அனைத்துவகைத் தொழில்களையும் அடியோடு புரட்டிப் போட்டிருப்பதால் நாடு முழுவதும் லட்சக்கணக்காணோர் வேலை இழந்துள்ளனர். சிறிய அளவிலான தொழில்கூடங்களும், கடைகளும் தங்கள் பணியாளர்களில் சிலரை இடைக்கால பணிநீக்கம் செய்வது, ஊதிய வெட்டை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறிய அளவிலான தொழிற்கூடங்களில் பெரும்பாலானவை இதுவரை வடமாநிலத் தொழிலாளர்களையே அதிக அளவில் பணியமர்த்தி வந்தன. அவர்கள் தொழில்கூடத்தின் அருகிலேயே தங்கி வேலை செய்து வந்தனர். நம்மவர்களைவிட அதீத உழைப்பைச் செலுத்திவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் குறைவான ஊதியத்துக்கும் வேலை செய்யத் தயாராய் இருப்பதே இதற்கு முக்கியக்காரணம்.
குறைந்த சம்பளத்தில் கூடுதல் நேரம் வேலை செய்வார்கள் என்பதால் தொழில் நிறுவனங்களும் வடமாநிலத் தொழிலாளர்களை ஆர்வத்தோடு பணியமர்த்தி வந்தன. இவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் விதிகளை பின்பற்றி முறையான பண பலன்களை வெகுசில முதலாளிகளே வழங்கி வந்தனர்.
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை செங்கல் சூளைகள், மீன்வலை தயாரிப்பு நிறுவனங்கள், காற்றாலை நிறுவனங்கள், எஸ்டேட்கள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் ஜவுளிக் கடைகளில் அதிகளவில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். பொதுமுடக்கத்தில் அவர்களைக் குமரிமாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறது. இதன் எதிரொலியாக ஏற்கெனவே உள்ளூரில் தாங்கள் பார்த்துவந்த வேலையை இழந்து தவித்துவந்த மண்ணின் மைந்தர்களுக்கு இந்த வேலைகள் கிடைத்து வருகின்றன.
கரோனா, பொதுமுடக்கம், புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு என வரிசைகட்டும் சோகங்களுக்கு மத்தியில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைகிடைப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.