தமிழகம்

தென்காசியைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா: 2 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தொற்று

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர் வசிக்கும் தெருவுக்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வெளியே செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணுக்கு யார் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து கண்டறிய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆக உள்ளது. அவர்களில் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT