தமிழகம்

நிலையான ஜவுளிக் கொள்கை கோரி நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தென்னிந்திய நூற்பாலை சங்கம் முடிவு

செய்திப்பிரிவு

நிலையான ஜவுளிக் கொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 3-வது வாரத்தில், நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) அறிவித்துள்ளது.

கோவையில், சிஸ்பா தலைவர் சி.வரதராஜன், செயலாளர் ஆர்.ரெங்கராஜன் ஆகியோர் நேற்று கூறியதாவது: பஞ்சு, நூல் விலையின் ஏற்றத்தாழ்வினால், நூலின் சந்தை மிகவும் மந்தமாக உள்ளது. வடமாநிலங்களில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் ஏற் பட்ட துணிகள் தேக்கம் காரணமாக நூலை விற்க முடியாமல் தமிழக நூற்பாலைகள் பெரும் நெருக் கடியைச் சந்தித்து வருகின்றன.

இந்திய பருத்திக் கழகம், லாபம் ஈட்டும் நோக்கோடு பெரிய பஞ்சு வியாபாரிகளுக்கும், இடைத் தரகர்களுக்கும் அதிக அளவில் பஞ்சை விற்பனை செய்து வரும் முறைக்கு ஆட்சேபம் தெரிவிக் கிறோம். செயற்கை இழை நூல் தயாரிக்கும் நூற்பாலைகள் தங்களது மூலப் பொருளான செயற்கை இழை கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றன. செயற்கை இழை மீதான இறக்குமதி வரி 23 சதவீதம் உள்ளதால், உள்நாட்டு விலையோடு ஒப்பிடும்போது இறக்குமதியின் விலை மிக அதிகமாக உள்ளது. இதனால், இங்குள்ள ஆலைகள் உள்நாட்டுச் சந்தையில் போட்டி போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, பஞ்சு இறக்குமதி வரியை போல், செயற்கை இழை மீதான இறக்குமதி வரிக்கும் மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். நூற்பாலைகளின் நெருக்கடிக்கு மத்திய அரசின் நிலையில்லா ஜவுளிக் கொள்கையே காரணம்.

தமிழகத்தில் கடலூரில் சாய ஆலை அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். பருத்தி நூல் மீதான விற்பனை வரியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி, நூற் பாலைகள் அனைத்தும் அகில இந்திய அளவில் ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் காரணமாக சுமார் ரூ. 100 கோடி அளவிலான 3 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT