இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து வழக்குப்போட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஓபிசி ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பாமக செய்திக்குறிப்பு வருமாறு:
“இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
இந்த சமூக அநீதியை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படியும் உச்சநீதிமன்ற பதிவுத்துறையிடம் கோரப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் கடந்த 4 ஆண்டுகளாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருக்கிறார்.
அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அந்தக்கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்”.
இவ்வாறு பாமக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.