மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் வைரஸ் தொற்று குறித்து அரசு முழுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என தெரிவித்து பொதுமக்கள் கையில்தான் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் முறை உள்ளது என முதல்வர் பேசினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
“மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமாகவும், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலமாகவும் வைரஸ் பரவியது.
ஏற்கெனவே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இன்று வளர்ந்த வல்லரசு நாடுகளில் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நிலையில் நமது மாநிலத்தில் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
டிஸ்சார்ஜ் ஆகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதைக்கண்டு மக்கள் அச்சமடையவேண்டாம். அரசு சொல்லும் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது அவசியம். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மருந்து கண்டுபிடிக்காத இந்த சூழ்நிலையில் மருத்துவர்களின் கடும் முயற்சியால் சிகிச்சையில் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதை காண முடிகிறது. பொதுமக்கள் ஓவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அதை ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு சொல்கிறோம்.
வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும். பொதுமக்கள் நோய் அறிகுறி, இருமல், சளி, காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் வைரஸ் நோய்ப்பரவலை தடுக்க முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நோய்ப்பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது முதல் இன்றுவரை மாவட்ட ஆட்சித்தலைவர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட வகையில் கரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
கரோனா வைரஸ் அதிக அளவில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிலர் சொல்கிறார்கள் நோய்க்கட்டுப்படுத்துவது அரசு செய்ய தவறுகிறது என்று இது மிக மிக தவறு.
அரசைப்பொறுத்தவரை நோய்ப்பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதிக அளவில் சோதனை நடத்தப்படுகிறது. அதிக அளவில் சோதனை நடத்துவதால்தான் அதிக அளவில் எண்ணிக்கை வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதை தடுப்பது முற்றிலும் பொதுமக்கள் கையில் உள்ளது.
மக்கள் எந்த அளவுக்கு உரிய ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவுக்கு நோயை கட்டுபடுத்த முடியும். ஆனாலும் மருத்துவ அதிகாரிகளின் கடுமையான பணியால் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியவர்கள் சதவீதம் 54 ஆகும்.
அனைத்து காய்கறிகள் கிடைக்கவும், விலை ஏறாமலும் பார்த்துக்கொள்ள வேளாண்துறை அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள்.
அத்தியாவசியப்பொருட்களை தடையின்றி முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடைச் செய்யப்பட்ட பகுதிகளுக்கும் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தந்த தலைமைச் செயலர், டிஜிபி, பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி”.
இவ்வாறு முதல்வர் பேசினார்.