மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்அருகே செங்கழுநீர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரின் 2 மகன்களான ஜெயபிரகாஷ்(7), குணால்(6) ஆகியோர் நேற்று காலைவீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் உறவினர் ஷீலா, சிறுவர்கள் இருவரையும், செங்கழுநீர்மேடு அடுத்த ராஜாதோப்பு அருகே உள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஷீலா குளக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருக்க, ஜெயபிரகாஷ், குணால் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதையறிந்த ஷீலா குளத்தில் குதித்து சிறுவர்களை காப்பாற்றமுயன்றார். ஆனால், 3 பேரும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையறிந்த பொதுமக்கள் 3 பேரின் உடல்களை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.