தமிழகம்

மீன் விற்பனையில் தொடரும் சிக்கல்களால் ஜூன் 15 முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு

செய்திப்பிரிவு

மீன் விற்பனையில் நிலவும் சிக்கல்,தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னையில் ஜூன் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு மற்றும் மீன் பிடிதடைக்காலம் காரணமாக விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடைக்காலம் குறைக்கப்பட்டு ஜூன் 1 முதல் மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், ஜூன் 15-ம் தேதி முதல் கடலுக்குச் செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:

ஏற்றுமதி பாதிப்பு

மீன்பிடி தடைக்கால நாட்களைகுறைத்தாலும் ஊரடங்கை தளர்த்தவில்லை. விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் பெரும்பாலான மீன்கள் ஏற்றுமதிதான் செய்யப்படுகின்றன. ஆனால், ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கவில்லை. கோவை, மதுரை,வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மீன் சந்தைகள் இயங்கவில்லை. இதனால், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் சுமார் 80 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து மீனவ சங்கங்களும் இணைந்து ஜூன் 15முதல் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம்.

கோரிக்கைகள்

மீன் சந்தைகளை திறக்க வேண்டும், வெளிமாநிலங்களுக்கு மீன்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கக் கூடாது, படகு பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT