‘பாகுபலி’ திரைப்படக் குழுவினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொதுச் செயலர் பேரறிவாளன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுவதும் ‘பாகுபலி’ தமிழ் திரைப்படத்தில், கதாநாயகன், ‘என் தாயையும், தாய் மண்ணையும் எந்த பகடைக்கு பிறந்தவனாலும் தொட முடியாது. பகடையை கிழித்து செங்குருதி குடித்து வெற்றி அறிவிக்கப் போகிறேன்’ என வசனம் பேசுகிறார். இதில் பகடை என்பது ஆதிதிராவிடர் ஜாதியில் அருந்ததியர் பிரிவில் உள்ள ஒரு ஜாதியின் பெயராகும். இந்த வசனத்தால் ஆதிதிராவிட வகுப்பினர் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ், இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜன், வசனகர்த்தா மதன்கார்க்கி, படத்தின் வெளியீட்டாளர் என்.ராதா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி 23.7.2015-ல் அண்ணாநகர் காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஆக. 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.