மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கூட உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் ஆன்லைன் அல்லது வீடுகளுக்கு நேரில் சென்று மதுபானம் விற்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
ராஜபாளையம் மேட்டுப்பட்டி சேத்தூரைச் சேர்ந்த டி.ரவிகண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசிடம் முறையாக உரிமம் பெற்று மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கூடம் நடத்தி வருகிறோம். இங்கு எங்கள் உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மது விற்பனை செய்து வருகிறோம். கரோனா பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக எங்கள் மனமகிழ் மன்றம் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்கள் உறுப்பினர்களை சமாதானப்படுத்த முடியாமல் உள்ளோம்.
மேலும் எங்கள் மதுபானக் கூடத்தில் இருப்பு இருக்கும் மதுபானம் வீணாகி வருகிறது. கர்நாடகாவில் தனியார் மனமகிழ் மன்றங்களில் இருப்பில் இருக்கும் மதுபானங்களை விற்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மனமகிழ் மன்றத்தில் உள்ள மதுபான கூடத்தில் இருந்து மதுபானங்களை எடுத்து உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு ஆன்லைன் மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்றும் விற்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அதை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குக என நீதிபதி உத்தரவிட்டார்.