வெலிங்டனில் கரோனா நிவாரண உதவி வழங்க வந்த அதிமுக எம்எல்ஏ சாந்திராமுவுக்கு சொந்த கட்சியினரே கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் மற்றும் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு (அதிமுக) இடையே கடந்த சில காலமாக மோதல் வலுத்து வருகிறது.
கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. எம்எல்ஏவை புறக்கணித்து விட்டு மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், குன்னூர் தொகுதியில் நிவாரணப் பொருட்களை வழங்கியதால் எம்எல்ஏ சாந்திராமு அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 28) குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியத்துக்கு உட்பட்ட பாபு வில்லேஜ் பகுதியில் எம்எல்ஏ சாந்தராமு நிவாரணப் பொருட்கள் வழங்க வந்தார்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரிய துணை தலைவர் எம்.பாரதியார் மற்றும் உறுப்பினர்கள், எம்எல்ஏவின் காரை வழிமறித்து, கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார் செல்ல முடியாததால் எம்எல்ஏ சாந்திராமு தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி சென்றார்.
குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு கூறும் போது, "குன்னூர் தொகுதிக்குட்பட்ட 1 லட்சம் குடும்பத்தினருக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கி வருகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்தவர்களே தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் துணை முதல்வர் மற்றும் எங்கள் மண்டல அமைச்சர்களிடம் புகார் தெரிவித்து, கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பாபு வில்லேஜ் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டதால் குன்னூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.