தமிழகம்

தூத்துக்குடி நகரில் 8 நாட்களுக்குப் பிறகு இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி நகரப் பகுதியில் 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வசித்த தெரு முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவங்காடு கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த இளைஞர் தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வங்கிக் கடன் தொடர்பான ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்துள்ளார். அதன் பிறகு கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவராகவே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடியில் அவர் வசித்த தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அந்த தெருவில் வசிக்கும் 8 குடும்பங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை வரை கடைக்கு சென்றுள்ளார். எனவே, அவரது கடை அருகேயுள்ள 2 கடைகளையும் மூடி சீல் வைத்துள்ளனர்.

மேலும், அவரது மனைவி, குழந்தை, மாமனார், மாமியார், அண்ணன் உள்ளிட்ட 6 பேருக்கு கோரனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது அண்ணன் தொடர்ந்து கடைக்கு சென்று வந்துள்ளார்.

அவர்களது பரிசோதனை முடிவை பொறுத்து வணிக வளாகத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT