சங்கரன்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் குப்பை சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தங்கவேல் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திருநீலகண்டர் ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரணியை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஊரணியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு சுற்றிலும் பேவர் ப்ளாக் கல் பதித்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரணியையொட்டி அம்பேத்கர் நகர் பகுதிக்குச் செல்லும் வழியில் நகராட்சி சார்பில் குப்பைகளைப் பிரித்தெடுப்பதற்காக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் கட்டிட பணி தொடங்கியது. இதற்கு அம்பேத்கார் நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு கட்டிட வேலைகள் நடத்தக் கூடாது என கூறினர்.
இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேல் மற்றும் திமுக பிரமுகர்கள் இன்று அப்பகுதிக்குச் சென்றார். அப்போது அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அப்பகுதியில் குப்பையை தரம் பிரிப்பதற்கான கட்டிடத்தை கட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக நகராட்சி ஆணையாளரிடம் முன்னாள் அமைச்சர் தங்கவேல் மனு அளித்தார். அதில், ‘சங்கரன்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்டர் ஊரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது குப்பை சேகரிக்க கட்டிடம் கட்ட முயற்சி செய்யும் இடம் திமுக ஆட்சிக் காலத்தில் சிறுவர் பூங்கா கட்ட ஓதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் தற்போது வரை அந்த இடம் பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த பகுதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையாக உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் குப்பை பிரிக்கும் கட்டிடப் பணிகளை நிறுத்திவிட்டு, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.