உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

கள நிலவரங்களை ஆய்வு செய்து சென்னையில் சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, முடிதிருத்தும் சலூன் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், ''ஊரடங்குக்கு முன்னதாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயும் இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடிதிருத்தும் தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று கோரியுள்ளார்.

முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினிச் சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு இன்று (மே 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே மே 23-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சென்னையைத் தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடையைத் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சுட்டிக்காட்டினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT