ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
விருதுநகர் மாவட்ட டீ, காபி, ஸ்வீட், காரம் கடை உரிமையாளர்கள் சங்க செயலர் தங்கராஜ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி டீ, காபி கடைகள் இயங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆயிரம் கே .செல்வகுமார் வாதிட்டார். மனுதாரர் தரப்பில், டீக்கடைக்காரர்கள் நலனுக்காக கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.