தமிழகம்

நாடகக் கலைஞர்களுக்கு பொறியாளர் உதவிக்கரம்

சு.கோமதி விநாயகன்

சினிமா, டி.வி.க்களின் வருகையால் மேடை நாடகக் கலைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வை நகர்த்தி வருகின்றனர். நாடகம் இல்லாத நாட்களில், விவசாய கூலித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடகக் கலைஞர் களின் குடும்பங்கள் வருமானமின்றி பரிதவித்து வருகின்றன. அவர்களின் துயரத்தை நீக்கி வருகிறார் பொறியாளர் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 15 நாடகக் கலைஞர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மின்வாரிய உதவிப் பொறியாளர் க.சுரதா வழங்கினார்.

இதுகுறித்து சுரதா கூறியதாவது:

மேடை நாடகக் கலைஞர்களுக்கு தை முதல் ஆடி வரையிலான சீசன் காலத்தில்தான் கோயில் விழாக்களின்போது நாடகங்கள் நடத்த வாய்ப்பு கிடைக்கும். இந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை ஊரடங்கால் நாடகங்கள் நடத்த முடியவில்லை. இதனால் அவர்கள் வறுமையின் பிடியில் உள்ளதாகக் கேள்விப்பட்டேன். எனது நண்பர்களுடன் கலந்து பேசி அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம். தமிழின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாடகக் கலைஞர்கள் நலமாக வாழ வேண்டும். அதனால்தான், எங்களால் முடிந்த சிறு உதவியைச் செய்தோம்.

இவ்வாறு சுரதா கூறினார்.

SCROLL FOR NEXT