கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை முறையிலான அக்குபஞ்சர் முறை மூலமாக சிகிச்சை அளிப்பது குறித்து மனுதாரரின் மனு மீது நான்கு வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது
சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 1979ல் 112 வகையான நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசும் கடந்த 2003 ம் ஆண்டு முதல் இயற்கை முறையிலாக அக்குபஞ்சர் முறையை அங்கீகரித்து வருகிறது. பரவிவிரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த சித்தா மற்றும் ஆயுர்வேதா மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என மத்திய அரசு, குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அக்குபஞ்சர் முறை மூலமாக சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 85.2% அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன், அக்குபஞ்சர் சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோன்று இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்.
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமாக "3 எம்.எல் ஆல்பா இம்மினோ குளோபின்" உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமாகிறது. மாத்திரைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர்.
அதனால், அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இந்திய மருத்துவ அறிவயல் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் ஆங்கில மருத்துவத்துடன் நோயாளிகளிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் 3 வாரங்களில் மத்திய அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும், அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.