தமிழகம்

யானை மிதித்து பாகன் பலி எதிரோலி: மதுரை கோயில் யானைகளை மருத்துவப் பரிசோதனை செய்த கால்நடை பராமரிப்புத் துறை 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை ஒன்று, அண்மையில் பாகனை மிதித்துக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அனைத்து கோயில் யானைகளையும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மருத்துவப்பரிசோதனை செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயில் யானை, சமீபத்தில் பாகனை மதித்துக் கொன்றது. அதனால், கோயில்யானைகளை ஆய்வு செய்து மருத்துவப்பரிசோதனை செய்ய தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரையில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் கால்நடைத்துறை உதவி இயக்குநர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமலிங்கலம், சிவக்குமார் ஆகியோர், திருப்பரங்குன்றம் கோயில் யானை, மீனாட்சியம்மன் கோயில் யானை, அழகர் கோயில் யானை ஆகிய மூன்று கோயில் யானைகளை இன்று ஆய்வு செய்தனர். இதில், யானைகளை மருத்துவப்பரிசோதனை செய்து அதனை பராமரிக்கும் பாகன்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மூன்று வேளையும் குளிப்பாட்ட வேண்டும், சத்தான உணவு வகைகள் சாப்பிடக் கொடுக்க வேண்டும், வாழைப்பழம், பேரிச்சம் பழம் போன்ற பழவகைகள் மற்றும் பசுமையான தீவனங்களையும் வழங்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தை கால்நடை பராமரிப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறுகையில், ‘‘பெண் யானைக்கு பொதுவாக மதம் பிடிக்காது. திருப்பரங்குன்றம் கோயில் யானை எப்போதாவது முரண்டு பிடிக்கும். அப்படி முரண்டு பிடித்தபோது, வாளியைத் தூக்கி கொண்டு முன்னால் சென்ற பாகனை தும்பிக்கையால் தட்டிவிட்டுள்ளது. அவர் யானையின் காலில் போய் விழுந்துள்ளார். அது காலால் எட்டி உதைத்துள்ளது. ஒரு விபத்தாக பாகன் உயிரிழந்துள்ளார், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT