சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கிராவல் மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.
காளையார்கோவில் அருகே சிவந்தரேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி உள்ளது. இக்கண்மாய்க்கு வேலாங்குளம் பகுதியில் இருந்து வரத்துக்கால்வாய் செல்கிறது.
இந்நிலையில் கண்மாயையொட்டி வரத்துக்கால்வாய் பகுதியில் கிராவல் மண் குவாரி அமைக்க சிலர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கிராமமக்கள் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் பணி தொடங்கியது. இதையறிந்த கிராமமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.
அதைதொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் கிராமக் கூட்டம் நடந்தது. இதில் கண்மாய்க்கு நீர் வரத்தை பாதிக்கும் மண் குவாரியை அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராமமக்கள் கூறுகையில், ‘கண்மாயை நம்பியே 100 ஏக்கரில் விவசாயம் உள்ளது. நாங்கள் மனு கொடுத்தபோது குவாரி அமைக்கப்படாது என ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால் அதையும் மீறி குவாரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,’ என்று கூறினர்.