அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 
தமிழகம்

குறைந்த விலையில் 1 கோடி முகக்கவசங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவு

செய்திப்பிரிவு

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தரமான, குறைந்த விலையில் 1.2 கோடி முகக்கவசங்கள் தயாரித்து, விநியோகிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (மே 27) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடைபெற்றவை குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி வெளியீடு:

"பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலைப்பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம் குறித்தும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் நிலை மற்றும் புத்தாக்கப் பயிற்சி, புத்தகப் பராமரிப்பு குறித்தும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 2019-20 முடிய உள்ள நிலுவை இலக்கு மற்றும் 2020-21 ஆம் ஆண்டு இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் 2019-20 ஆம் ஆண்டில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மற்றும் குட்டைகள் மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடித்து பணியினை துரிதமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக முகக்கவசங்கள், கிருமி நாசினி மற்றும் கைக்கழுவும் திரவம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக இதுநாள் வரை 88 லட்சத்து 11 ஆயிரத்து 345 முகக்கவசங்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 509 லிட்டர் கிருமி நாசினிகள், 94 ஆயிரத்து 457 லிட்டர் கைக்கழுவும் திரவம் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 14.33 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 7 லட்சத்து 61 ஆயிரத்து 230 எண்ணிக்கையில் முகக்கவசங்களும், 12 ஆயிரத்து 850 லிட்டர் கிருமி நாசினியும், 28 ஆயிரத்து 547 லிட்டர் கைக்கழுவும் திரவ சோப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக தரமான, குறைந்த விலையில் 1 கோடி முகக்கவசங்கள் தயாரித்து வழங்கவும் கூட்டத்தில் அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 650 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தில் தற்பொழுது வரை 12 லட்சம் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஏப்ரல் 2020 முதல் 23.05.2020 வரை ரூ.1,704 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளில் 66 ஆயிரத்து 833-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் தன்னார்வத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். உழவர் சந்தைகள், காய்கறி, ஏடிஎம் மற்றும் பொது விநியோகக் கடைகளில் சமூக இடைவெளியினை உறுதி செய்யவும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்தும் செயல்பட்டு வருகின்றனர்.

கிராம அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை 19 ஆயிரத்து 792 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 8.45 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்து உள்ளார்கள். நலிவுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி மூலம் கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் மலைவாழ் மக்கள் அடங்கிய 30 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.17.57 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும், கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஊரகப் பகுதியில் உள்ள பயிற்சி பெற்ற 540 இளைஞர்கள், அரசு மருத்துவமனைகளில் நலவாழ்வு பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

முதல்வரின் ஆணைப்படி, நகர்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 1 லட்சத்து 5,853 தெருவோர வியாபாரிகளுக்கு .10.58 கோடியில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள 168 வீடற்றோர்களுக்கான உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 6,363 வீடற்றவர்களுக்கு இதுவரை நகர்ப்புற மேம்பாட்டு இயக்க நிதியின் மூலம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய தமிழகத்தின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதாரப் பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 238 நபர்கள் தற்பொழுது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 தடுப்பு பணியில் ரூ.13 ஆயிரத்திற்கு மிகாமல் மாத ஊதியம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், சுகாதாரப் பிரிவில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயிற்சி நிறுவனங்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் 14.33 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அகில இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இச்செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக திறன் பிரிவிலிருந்து பாராட்டு கடிதம் வரப்பெற்று அதில் உரிய நேரத்தில் மாநில அரசினை அழைத்து கவுரவிப்பார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT