தமிழகம்

காப்பகத்தில் சேர்க்கச் சொன்ன பெண் குழந்தையை ரூ 1.5 லட்சத்துக்கு விற்ற நண்பர்: உண்மையறிந்து குழந்தையை மீட்ட ஏழைத் தந்தை

ரெ.ஜாய்சன்

காப்பகத்தில் சேர்க்கச் சொன்ன பெண் குழந்தையை ரூ 1.5 லட்சத்துக்கு நண்பர் விற்றுவிட உண்மையறிந்து ஆட்சியர் உதவியை நாடி தனது குழந்தையை போராடி மீட்டுள்ளார் ஏழைத் தந்தை ஒருவர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் இரண்டு பெண் குழந்தையை வளர்க்க அஷ்ரப் அலி கஷ்டப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஒரு பெண் குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவி செய்யுமாறு தனது நண்பரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அவரது நண்பர் அந்த மூன்றரை வயது பெண் குழந்தையை காப்பகத்தில் சேர்த்ததாக கூறிவிட்டு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனது குழந்தையைப் பார்க்க வேண்டும் என அஷ்ரப் அலி தனது நண்பரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது நண்பர் பலமுறை தட்டிக் கழித்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு இடத்தில் குழந்தை இருப்பதாக கூறி முகவரியை கொடுத்துள்ளார்

அந்த முகவரிக்கு அஷ்ரப் அலி சென்று பார்த்த போது அவர் கொடுத்த முகவரியில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போன் மூலம் இது குறித்து தனது நண்பரிடம் கேட்டபோது குழந்தையை விற்று விட்டதாகவும் இதை வெளியே கூறினால் காவல்துறையினரிடம் புகார் அளித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து மதுரை ஆட்சியரிடம் நடந்ததைக் கூறி மனு ஒன்றை அஷ்ரப் அலி அளித்துள்ளார். மதுரை ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அந்த குழந்தையை கண்டு பிடிக்கும்படி உத்தரவிட்டார்.

மதுரை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அஷ்ரப் அலியின் நண்பரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் அளித்த தகவளின்படி காவல்துறையினர் அடுத்த ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் பகுதியில் ஒரு தம்பதியிடம் குழந்தை இருப்பதை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு நேரில் சென்று வீடியோகால் மூலம் அந்த குழந்தையை தனது தந்தையுடன் பேச வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமாருக்கு அளித்த தகவளின் பேரில், அவரது தலைமையில் அலுவலகர்கள் கோவில்பட்டிக்கு நேரில் சென்று குழந்தையை மீட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணைக்கு பின் குழந்தை பெற்றொரிடம் ஓப்படைக்கப்படும் என ஜோதிகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT