இலவச மின்சாரம் ரத்து என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் விவசாயிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். அதானி, அம்பானி கம்பெனிகள் லாபம் அடைவர் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளை ஒட்டி மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று மாலை அணிவித்தார். நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில செயற் குழு உறுப்பினர் சையதுபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
இலவச மின்சாரம் ரத்து என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் விவசாயிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். அதானி, அம்பானி கம்பெனிகள் லாபம் அடைவர்.
ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சார கட்டணம் உயரும். டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மின்சாரத்தை தனியார் மயமாக்கியதால் அங்கு 2013ல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து தனியார்மயத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. மின்சாரம் ரத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும், நீட் தேர்வு போன்று நீர்த்துபோகாமல் உண்மையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.
ஊரடங்கு விஷயத் தில் மத்திய அரசு குழப்பான முடிவுகளை எடுத்தது. தன்னிச்சையாக எடுத்த முடிவால் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
மாநில அரசுகளைக் கேட்காததால் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இது வரை 1.35 லட்சம் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மக்களைப் பற்றி பேசாத மத்திய அரசால் தற்போது பொருளாதாரப் பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. மக்களை கடன்காரர்களாக்கியது மோடி அரசையே சேரும்.
பணக்காரர்களுக்கு லாபத்தை ஏற்படுத்தி தருகின்றனர். விமானத்தில் ஒரு சீட்டில் 3 பேர் அமர்ந்து செல்லலாம். ஆனால் பேருந்துகளில் ஒரு இருக்கையில் இருவர் மட்டுமே உட்கார்ந்து செல்லவேண்டுமாம்.
எப்போதும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமான முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.